கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை-அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தொடக்க விழா
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் வகுப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணைவேந்தர் குமார் வரவேற்றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலும் இன்றைய கல்வி முறை இருக்கவேண்டும். இதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொழில்முனைவோரை உருவாக்கும் படிப்புகளை தொடங்க வேண்டும்.
தேசிய கல்விக்கொள்கையானது 3-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்கிறது. இதனை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டால் ஒவ்வொரு மாணவரும் 3-ம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் வெளியேற நேரிடும். எனவே தான், கிராமப்புற மாணவர்களை அதிகம் பாதிக்கும், நீட், சி.யூ.இ.டி. உள்ளிட்ட தேர்வுகளை நிறுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மாநில அரசின் கல்வித்திட்டங்களான, "நான் முதல்வன், புதுமைப்பெண்" போன்ற திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும், அவை எவ்வாறு கிராமப்புற மாணவர்களுக்கு பயன்தரும் என்பது குறித்தும் விளக்கமளித்தார். பின்னர், புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை அட்டை மற்றும் கையேட்டை வழங்கினார்.
கல்லூரிகள் மீது நடவடிக்கை
முன்னதாக, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு), தொலைநிலைக்கல்வி இயக்குனர் (பொறுப்பு), தேர்வாணையர் (பொறுப்பு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறும்போது, அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகளும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர்களை மாநில அரசு தேர்ந்தெடுக்கும் அதிகாரம் குறித்த தீர்மானம் மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.