ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை

ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-28 18:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றிய பகுதிகளான கொத்தவாசல், கொளப்பாடி பெரியவெண்மணி, மூங்கில்பாடி, ஒதியம், சித்தெளி, பேரளி மற்றும் மருவத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டது. எந்த விதமான புகார்களும் எழவில்லை. அதுபோல அரசு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர். ஆனால் தற்போது திடீரென ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களின் சங்கத்துக்கு கட்டுப்பட்ட பஸ்களில் அது போன்ற கட்டண உயர்வு ஏற்படுத்தப்படவில்லை. சில பஸ்களில் மட்டுமே அது போன்ற தவறுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் 4 ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து கூடுதலாக வசூலித்த ரூ.10,000 தொகையை பெற்று மீண்டும் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பஸ்கள் வாங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு உரிய கால இடைவெளியில் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்