குழந்தைகள் இல்லம்-மகளிர் தங்கும் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை-தர்மபுரி கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகளை பதிவு செய்யாமல் நடத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அரசின் விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-18 17:31 GMT

கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் நடத்தும் உரிமையாளர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

அரசு குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்து நடத்திட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசால் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழில்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் இத்தகைய அமைப்புகள் உடனடியாக பதிவு செய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

அரசின் விதிமுறைகளின் படி பதிவு செய்யாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

இதனை நடத்தும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் இல்லங்களை https://www.tnswp.com என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் கட்டாயம் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகிற 31-ந் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் நடத்தும் உரிமையாளர்கள், விடுதி காப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்