செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2023-05-11 18:45 GMT

கடலூர்

ஆலோசனை கூட்டம்

பழ வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதி பொருட்களை தெளித்தோ(எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம்.

அதனை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதுடன், புற்றுநோய் ஏற்படுவதற்கும் ஒரு காரணியாக இருக்கிறது.

சீல் வைக்கப்படும்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன் உடனடி அபராதம் விதிக்கப்படும். மேற்குறிப்பிட்ட குற்றத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யவும், மூன்று மாத காலம் வரை கடையை சீல் வைத்து வர்த்தகத்தை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே பொதுமக்களின் நலன் கருதி கடலூர் மாவட்டத்தில் உள்ள பழங்கள் மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லரை வணிகர்கள் வேதி பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். நுகர்வோருக்கு வழங்கப்படும் பழங்கள் பாதுகாப்பானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை

மேலும் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் foodsafety.tn.gov.in என்ற புதிய இணையதளம் மற்றும் tnfoodsafety consumer app என்ற செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார்தாரரின் விவரங்கள் மற்றும் ரகசியம் பாதுகாக்கப்படுவதுடன், புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்யப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்றார்.

இதில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்