திருமருகல் பகுதியில் வயல்களில் தேங்கிக் கிடக்கும் வைக்கோல்

வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-02-26 18:45 GMT

திட்டச்சேரி:

வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல் பகுதியில் வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சம்பா சாகுபடி

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்குப்புத்தாறு, ஆழியாறு, நரிமணி ஆறு, வீரமுட்டி ஆறு, தெற்குப்புத்தாறு, பிராவடையனாறு, வளப்பாறு ஆகிய ஆறுகள் ஓடுகிறது. இந்த ஆறுகள் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. திருமருகல் பகுதியில் சுமார் 25 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

மழையால் அறுவடை பணி பாதிப்பு

கடந்த மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருமருகல் பகுதியில் நெல் அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடைக்கு பிறகு வைக்கோலை கால்நடைகளுக்கு உணவுக்காகவும், வியாபாரிகளிடமும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வைக்கோலை பயன்படுத்தி பேப்பர் தயாரிப்பு மற்றும் பிற தேவைகளுக்காக வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

வயல்களில் தேங்கி கிடக்கிறது

இந்த நிலையில் இந்த ஆண்டு வைக்கோல் விற்பனை குறைந்து காணப்படுகிறது. வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், தென்பிடாகை, திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி, கொட்டாரக்குடி, காரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆங்காங்கே வயல்களில் வைக்கோல் தேங்கிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்