தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வடமேற்கில் சுமார் 110 கிமீ தொலைவிலும்,
மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவிற்கு தென்-தென்கிழக்கே ஆயிரத்து 460 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 23 காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
அப்போது, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்டோபர் 24-ஆம் தேதி காலை மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது. பின்னர் வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25 அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்காளதேச கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நாளையும் நாளை மறுநாளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.