கட்டுமான பணிகள் தடுத்து நிறுத்தம்

குன்னூரில் அனுமதியின்றி நடந்த கட்டுமான பணிகளை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-03-15 18:45 GMT

குன்னூர், 

குன்னூரில் அனுமதியின்றி நடந்த கட்டுமான பணிகளை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குன்னூரில் நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர். நகர், சுறா குப்பம் குடியிருப்பு பகுதிகள் ஆகும். இப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். எம்.ஜி.ஆர். நகர், சுறா குப்பம் பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதனால் அதையொட்டி உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த சமயங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆற்றோரத்தில் வீடு கட்டியுள்ள 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடங்களை காலி செய்ய வேண்டும் என வருவாய்த்தறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தடுத்து நிறுத்தம்

இதையடுத்து நிரந்தர தீர்வு காணும் வகையில் எம்.ஜி.ஆர். நகர், சுறா குப்பம் பகுதி மக்களுக்கு அரசு சார்பில் கேத்தி அருகே வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அங்கு தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை இல்லை என்று கூறி புதிய வீடுகளுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் எம்.ஜி.ஆர். நகர், சுறா குப்பம் பகுதிகளில் புதிதாக கட்டிடம் கட்டவும், இடிந்த கட்டிடங்களை புதுப்பிக்கவும் அரசியல் கட்சியினர் சிலர் வாய்மொழியாக அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர்.

அப்போது தாசில்தார் சிவக்குமார் பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டக்கூடாது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை மேற்கொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்