பட்டாசு ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்

பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திகொண்ட நிலையில் 50 சதவீத பட்டாசு கடைகளும் விற்பனையை விரைவாக முடித்துக்கொண்டு விடுமுறை அளித்து விட்டனர்.

Update: 2022-10-22 19:58 GMT

சிவகாசி, 

பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திகொண்ட நிலையில் 50 சதவீத பட்டாசு கடைகளும் விற்பனையை விரைவாக முடித்துக்கொண்டு விடுமுறை அளித்து விட்டனர்.

பட்டாசு ஆலைகள்

சிவகாசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த நவம்பர் மாதம் தனது உற்பத்தியை தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் 3 மாதம் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. பின்னர் ஒரு சில பெரிய பட்டாசு ஆலைகள் மட்டும் திறக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது.

இதற்கிடையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பல பட்டாசு ஆலைகள் முழுமையாக செயல்பட முடியாமல் போனது. இதனால் வழக்கமான உற்பத்தி இலக்கை அடையமுடியாமல் பெரும் சிரமம் அடைந்தனர். கடைசி நேர உற்பத்தி இழப்பை சரிகட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை அவ்வப்போது குறுக்கிட்டு பட்டாசு உற்பத்திக்கு தடை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.

கடைகள்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய 3 தாலுகாவில் பட்டாசு கடைகள் அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு போதிய பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம்.

அவ்வாறு கடந்த 1 மாதமாக பல ஆயிரம் பேர் சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கி சென்றனர். இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்றே 50 சதவீத பட்டாசு கடைகள் தங்கள் விற்பனையை முடித்துக்கொண்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஒருசிலர் சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்ல விரும்பலாம். அவர்களுக்காக சில பட்டாசு கடைகள் இன்று செயல்படும் என்று பட்டாசு வியாபாரி பைக்பாண்டி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்