'உழவர் சந்தை முன்பு கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்'

பழனி உழவர் சந்தை முன்பு கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2023-06-13 13:57 GMT

பழனி உழவர் சந்தையில் விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெற்றிச்செல்வியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பழனி உழவர் சந்தையில் தினமும் 20 முதல் 30 டன் காய்கறிகள் இடைத்தரகர்கள் இன்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு உழவர் சந்தை அருகே தற்காலிக கடை அமைத்து தரப்பட்டுள்ளது. உழவர் சந்தை நுழைவுவாசலிலேயே சாலையோரத்தில் வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். உழவர் சந்தைக்கு செல்லும் பாதையை மறைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் உழவர் சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டு, தினமும் 10 டன் காய்கறிகளை கீழே கொட்டி செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே உழவர் சந்தை முன்பு, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும். மேலும் காலை 6 மணி முதல் 10 மணி வரை காந்தி மார்க்கெட் வியாபாரிகள், காய்கறி வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்