மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல் திட்டை கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-15 17:15 GMT

கிருஷ்ணகிரி:

மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருங்கற்படைகள்

தென்னிந்தியாவில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் பெருங்கற்படைகள், இரும்பு காலத்தை சேர்ந்தவை என கருதப்பட்டு வருகிறது. தற்போது அகழாய்வு நடந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் பகுதியில், இந்த கலாச்சார கூறுகளான கருப்பு, சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கி விட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியவதாவது:-

ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது. இது பெருக்கல்குறி போன்ற உடலமைப்பை கொண்ட மனித உருவம். இரும்பு கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் பெருங்கற்படை சின்னங்கள், ஆயிரம் ஆண்டுகள் அதாவது கி.மு. 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில் ஒரு கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.

புதிய கற்காலம்

இந்த கல்திட்டை வழக்கமான போல் இல்லாமல் மிகவும் முற்பட்டதாய் உள்ளது. அதாவது ஒரு கல்திட்டை 3 பக்கமும் பலகை கற்களை நிறுத்தி அதன் மேல் ஒரு பலகை கல் வைத்து மூடப்பட்டு உள்ளது. வழக்கத்துக்கு மாறாக இந்த கல்திட்டை 3 சிறு கற்களின் மீது ஒரு பெரும் பாறாங்கல்லை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனை "தூக்கி வைத்தான் கல்" எனவும் குறிப்பிடுவார்கள்.

இதன் காலத்தை உறுதி செய்யும் விதமாக புதிய கற்கால செஞ்சாந்து ஓவியமும் மிக அருகிலேயே காணப்படுகிறது. மயிலாடும்பாறை அகழாய்வின் முடிவுகளும், மேற்பரப்பில் காணப்படும் செஞ்சாந்து ஓவியம் மற்றும் இந்த கல்திட்டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம் கி.மு. 1000 என்பதில் இருந்து கி.மு.2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது புதிய கற்காலத்திலேயே கருப்பு சிவப்பு பானை வகையும் பெருங்கற்படைகளும் தோன்ற தொடங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்