திருடி சென்ற மோட்டார் சைக்கிள் காரைக்குடியில் மீட்பு

ஓட்டி பார்ப்பதாக கூறி ஷோரூமில் இருந்து திருடி சென்ற மோட்டார் சைக்கிள் காரைக்குடியில் மீட்கப்பட்டது.

Update: 2023-06-29 11:25 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் விலை உயர்ந்த அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஷோரூம் உள்ளது.

கடந்த 27-ந் தேதி இந்த ஷோரூமுக்கு காரில் வந்த வாலிபர் சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார்சைக்கிள் ஒன்றின் விவரங்களை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அந்த மோட்டார் சைக்கிள் தனக்கு பிடித்திருப்பதால் அதனை வாங்க விரும்புவதாக கூறினார். மேலும் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

ஷோரூமில் இருந்தவர்களும் வாலிபர் வந்த கார் வெளியில் நிற்பதால் அவரை நம்பி மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க கொடுத்தனர். கிரிவலப்பாதை வழியாக அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் வெளியில் நிறுத்தியிருந்த கார் டிரைவரிடம் விசாரித்தனர்.

புதுச்சேரியில் இருந்த வாடகைக்கு சவாரி வந்ததாகவும், அந்த வாலிபர் குறித்து எந்த விபரமும் தெரியாது என்றும் டிரைவர் கூறினார். மேலும் தனக்கும் வாடகை தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேற்று காலை நீண்ட நேரமாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிற்பதாக தகவல் கிடைத்தது.

விசாரணையில் திருவண்ணாமலை இருந்து மர்ம நபரால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டு சம்பந்தப்பட்ட ேஷாரூமில் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்