சென்னிமலையில் 2 அலுவலகங்களில் திருடிய அசாம் வாலிபர்கள் 3 பேர் கைது
அசாம் வாலிபர்கள் 3 பேர் கைது
சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோட்டில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கட்டிடத்தின் மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி இரவு மர்ம நபர்கள் 3 பேர் முகமூடி அணிந்தபடி எரிவாயு நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை திருடியுள்ளனர். அதேபோல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் கைவரிசை காட்டியுள்ளார்கள். இரு அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.45 ஆயிரம் திருட்டுப்போனது. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னிமலை போலீசார் சென்னிமலை - ஈங்கூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவர் உசேன் (வயது 22), சைக்குள் இஸ்லாம் (வயது 32), மன்சூர் அலி (வயது 22) ஆகியோர் என்பதும், அவர்கள்தான் 2 அலுவலகங்களிலும் பணத்தை திருடினார்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். இவர்கள் 3 பேரும் சென்னிமலை அருகே எம்.பி.என்.காலனியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.