சீராக வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
சீராக வேலை வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு வரும் லாரிகளில் மணல் ஏற்றிய பின்னர் அதனை மட்டம் தட்டி தார்ப்பாய் அமைப்பது, லாரி வழித்தடங்களை சீரமைப்பது உள்ளிட்ட வேலைகளை கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பனையபுரம், உத்தமர்சீலி, நடுவெட்டி, கிளிக்கூடு உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மணல் குவாரியில் ஊர் வாரியாக தினமும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது.
இந்நிலையில் உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதி மக்களுக்கு மட்டும் வாரத்தில் 4 நாட்கள் வேலை வழங்கப்படுவதாகவும், நடுவெட்டி பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு குறைந்த நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், அதை தவிர்த்து அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக வேலை வழங்கும்படியும் கூறி நடுவெட்டி பகுதி மக்கள் நேற்று திடீரென கல்லணை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.