"96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை"- சபாநாயகர் அப்பாவு பேச்சு
“தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 1½ ஆண்டுகளில் 96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
களக்காடு:
"தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 1½ ஆண்டுகளில் 96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
ரேஷன் கடை திறப்பு விழா
களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்தது. அந்த கடனுக்கு மாதாமாதம், ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கொடுக்க வேண்டியதுள்ளது. இந்த நிதி நெருக்கடியால் தான் உடனடியாக உரிமை தொகை ரூ.1000 வழங்க முடியவில்லை. நிதி நெருக்கடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர் செய்து வருகிறார். எனவே அடுத்த ஆண்டில் (2023) பெண்களுக்கு உரிமை தொகை ரூ.1000 கண்டிப்பாக வழங்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர்
தி.மு.க. ஏழைகளை பற்றி சிந்திக்க கூடிய அரசு. சாமானிய மக்களின் வீட்டு பிள்ளைகளும், சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துடன் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் தொடங்கி வருகிறார். மேலும் பெருந்தலைவர் காமராஜரை பெருமைப்படுத்தும் விதமாக கல்லூரிகளில் அரசு நிதியின் மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு காமராஜர் நினைவு கட்டிடம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்டத்தின் மூலம் 1½ ஆண்டுகளில் 96 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குறுக்கு வழியில் ஆட்சி
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசுகையில், 'மாண்டஸ் புயல் தடுப்பு நடவடிக்கைகளை திறமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாண்டுள்ளார். காமராஜர் வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். ராகுல் காந்தி ஏழை மக்களுக்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வரும் 2024-ம் ஆண்டில் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராவார். குஜராத் தேர்தலில் கடைசி 1 மணி நேரத்தில் 16 லட்சம் ஓட்டுகள் பதிவானதாக கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்?. மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் பா.ஜ.க.வினர் ஆட்சிக்கு வருகின்றனர்' என்றார்.