''தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை''
‘‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை’’ துரை வைகோ கூறினார்.
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது பெரும் துயரமான சம்பவம். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தான் நிரந்தர தீர்வு என கூறி வருகிறோம். இந்த சம்பவம் தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் ஒரு படிப்பினை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தான் ம.தி.மு.க.வின் விருப்பம். சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறோம். டாஸ்மாக் பார் நடத்துவதில் முறைகேடுகள் உள்ளது. இதனை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். ம.தி.மு.க. அவை தலைவராக அவரையே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது கட்சி உயர்மட்ட குழு முடிவு செய்யும். நான் தேர்தலில் போட்டியிடுவது என்பது கட்சி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் வடகாடு அருகே அனவயல் பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட துரை வைகோ பேசுகையில், பெற்றோர்கள் காலிலோ அல்லது இறை நம்பிக்கை இருந்தால் சாமி காலிலோ விழலாமே தவிர, யாரும் அரசியல்வாதிகள் காலில் விழாதீர்கள். இயற்கை வளங்களை காப்பாற்றுங்கள். அரசியல் வேறுபட்டு இருந்தாலும் ஊர் வளர்ச்சியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்றார்.