கரிம வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புவி வெப்பமயமாதலை தடுக்க கரிம வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2023-05-19 10:14 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உலக அளவில் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கரிம வாயுக்களின் வெளியேற்றம் இன்று வரை கட்டுப்படுத்தப்படாததால், 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளில் புவி வெப்பநிலை, அபாய கட்டத்தை தாண்டிவிடும் என்று உலக வானிலையியல் நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

பேரழிவிலிருந்து உலகை காக்க புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்கும் கட்டுப்படுத்தவேண்டும் என்று சுற்றுசூழல் அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை உலகம் செவிமடுக்க மறுப்பது கவலை அளிக்கிறது. புவிவெப்பநிலை உயர்வால் சுகாதாரம், உணவு பாதுகாப்பு, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மிக மோசமான தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

புவிவெப்பநிலை ஒரு பக்கம் உயர்வதுடன், மறுபக்கம் மனிதர்கள் மற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளால் பசுமை இல்லவாயுக்களும் மிக அதிக அளவில் வெளியேறுகின்றன. அதனால், கடல் வெப்பமயமாதல் மற்றும் அமிலமயமாதல், பனிப்பாறை உருகுதல், கடல் மட்டம் உயருதல் போன்றவையும் நிகழக்கூடும். அவை நிகழ்ந்தால் பேரழிவுகள் ஏற்படக்கூடும்.

உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டும் தான் புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை 2030-ம் ஆண்டுக்குள் செய்துமுடிக்கவேண்டும். அதற்கு இன்னும் 7 ஆண்டுகளே இருப்பதால் புவி வெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைவுபடுத்த வேண்டும்.

காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதற்கு புவியிலிருந்து மாசுக்காற்று அதிக அளவில் வெளியேற்றப்படுவது தான் காரணம். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மாசுக்காற்றையும் குறைக்கவேண்டும். காலநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள் தான் காரணம், இதில் நமக்கு பங்கில்லை என்று கூறி இந்தியா ஒதுங்கியிருந்து விடமுடியாது.

கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மாசுக்காற்றில் 55 சதவீதம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை ஆகும். அதனால், மாசுக்காற்றை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு இந்தியாவுக்கும் உண்டு. இந்தியாவில் தமிழகத்துக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. ஆனால், மத்திய-மாநில அரசுகள் அதை உணரவில்லை.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்தும் நிலக்கரியை எரிபொருளாக கொண்ட அனல் மின்நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படுவதே இதற்கு சான்று. புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை கருத்தில்கொண்டு, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கரிம வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.        

Tags:    

மேலும் செய்திகள்