சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடி பதுக்கல்
தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்த சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர்கள் பொருட்கள் திருடி பதுக்கினர். அதனை அதிகாரிகள் மீட்டு மீண்டும் ‘சீல்’ வைத்தனர்.
தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்த சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர்கள் பொருட்கள் திருடி பதுக்கினர். அதனை அதிகாரிகள் மீட்டு மீண்டும் 'சீல்' வைத்தனர்.
பல கோடி ரூபாய் மோசடி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் கவர்ச்சி திட்டங்களை அறிவித்தது. இதனை நம்பி வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சீட்டு பிடித்து பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்தனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த நிலையில் அந்த நிதி நிறுவன உரிமையாளர் சம்சு மொய்தீன் தலைமறைவாகிவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த நிதி நிறுவனத்தின் சார்பில் வந்தவாசியில் ஆரணி சாலையில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு போலீசார் 'சீல்' வைத்தனர்.
பொருட்கள் திருட்டு
இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டு இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது திருட்டு போன பொருட்களின் ஒரு பகுதி அருகில் இருந்த 5 கடைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பதுக்கி வைத்திருந்த மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் முன்னிலையில் மீட்ட போலீசார், அவற்றை மீண்டும் அங்காடிக்குள் வைத்து பூட்டி 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.