இலவச வேட்டி, சேலையை திருடி ஆட்டோவில் கடத்தல்

திருவண்ணாமலையில் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசின் இலவச வேட்டி, சேலையை திருடி ஆட்டோவில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-07 16:44 GMT

திருவண்ணாமலையில் போலீஸ் நிலையம் அருகே தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசின் இலவச வேட்டி, சேலையை திருடி ஆட்டோவில் கடத்தி சென்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், திருவண்ணாமலை கிளை சிறை, சார் பதிவாளர் அலுவலகம், சார் கருவூலம், சிறார் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி திருவண்ணாமலை தாலுகா அலுவலக நுழைவு வாயில் அருகில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையம் உள்ளது. மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்வதற்கான இலவச வேட்டி, சேலை மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று பல்வேறு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்று உள்ளது. அப்போது போலீஸ் நிலையம் அருகில் இருந்த போலீசார் அந்த ஆட்டோ மடக்கி சோதனை செய்தனர்.

அரசின் இலவச வேட்டி, சேலை

ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மூட்டைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் 11 மூட்டைகளில் அரசின் இலவச வேட்டி, சேலைகள் திருடி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் உடனடியாக திருவண்ணாமலை தாலுகா வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாலுகா அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் ஆட்டோவில் கடத்தி சென்றது திருவண்ணாமலை தாலுகாவிற்கு உட்பட்டதா? என்று குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள 800 சேலைகள் மற்றும் 400 வேட்டிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டது தாலுகா அலுவலக குடோனில் இருந்து திருடிய வேட்டி, சேலை மூட்டைகள் என்பது தெரியவந்தது.

2 பேரிடம் விசாரணை

அதனை தொடர்ந்து துணை தாசில்தார் ரமேஷ் குடோனில் இருந்த 11 மூட்டை அரசின் இலவச வேட்டி, சேலைகள் காணவில்லை என்று திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் அருகில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து அரசின் இலவச வேட்டி, சேலை திருடி கடத்தப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்