விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் பாரதமாதா சிலை
அண்ணாமலை நடைபயணத்தையொட்டி விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்த பாரத மாதா சிலையை அகற்றும்படி போலீசார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை நடைபயணத்தையொட்டி விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்த பாரத மாதா சிலையை அகற்றும்படி போலீசார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடை பயணம்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை விருதுநகர் மாவட்டத்தில் நாளை நடைபயணத்தை தொடங்குகிறார். விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையொட்டி விருதுநகரில் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலக வளாகத்தில் 5 அடி உயர பாரத மாதா கற்சிலையை அமைத்தனர்.
பாரத மாதா சிலை
இந்தநிலையில் விருதுநகர் தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
அரசு அனுமதி பெற்றுத்தான் சிலையை வைக்க வேண்டும் என்றும், எனவே தற்போது சிலையை அகற்றுமாறு பா.ஜனதாவினரிடம் வலியுறுத்தினர்.
பா.ஜனதா தரப்பில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அலுவலக வளாகத்திற்குள் வைத்திருப்பதால் சிலையை அகற்ற தேவையில்லை என பா.ஜனதா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், நடைபயண வரவேற்பு விழா ஏற்பாடுகளுக்காக வெளியில் சென்று உள்ளதால் அவர் வந்த பின்பு இது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலையானது துணியால் மூடப்பட்டுள்ளது.