நாமக்கல்லில் நடந்து வரும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் 2-வது நாளில் சென்னை, கோவை அணிகள் வெற்றிவாகை சூடின.
கூடைப்பந்து போட்டி
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 31 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
முதல் போட்டியில் சென்னை அரைஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் சேலம் ஸ்பார்க் மற்றும் பி.ஆர்.டி. அணிகள் வெற்றி பெற்றன. 2-வது நாளான நேற்று காலையில் சென்னை லயோலா கல்லூரி அணியும், கோவை குமரகுரு அணியும் மோதின. இதில் குமரகுரு அணி 99-க்கு 85 என்கிற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை அணி வெற்றி
நேற்று மாலையில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும், நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து கழக அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் நாகர்கோவில் அணி 75-க்கு 69 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து சென்னை சத்யபாமா கல்லூரி அணியும், மதுரை பிகாசஸ் அணியும் மோதின. இதில் சென்னை சத்யபாமா கல்லூரி அணி 74-க்கு 54 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் 3 நாட்கள் நாக்அவுட் முறையிலும், அடுத்த 2 நாட்கள்ல் லீக் அடிப்படையிலும் போட்டிகள் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவுகளிலும் தலா 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.