படப்பிடிப்பு முடிந்து காரில் நின்றவாறு கையசைத்த ரஜினிகாந்த்
திருவண்ணாமலை அருகே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் காரிலிருந்தவாறு ரகிகர்களை நோக்கி கையசைத்து சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அப்படம் திரைக்கு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றது.
இதில் நடிப்பதற்காக அவர் கடந்த 25-ந் தேதி மதியம் திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் திருவண்ணாமலையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் முதல் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் சத்திரம் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் 'லால் சலாம்' படத்தின்படப்பிடிப்பு நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இதையொட்டி அந்த பண்ணை வீட்டின் முன்பு ரசிகர் கூட்டம் சேர விடாத வகையில் போலீசார் மற்றும் பவுன்சர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
2-ம் நாள் படப்பிடிப்பு
இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் மாலையில் பண்ணை வீட்டில் இருந்து வெளியே வரும் நடிகர் ரஜினிகாந்த்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் பண்ணை வீட்டின் முன்பு சாலையோரத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து பண்ணை வீட்டில் இருந்து காரில் நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்தார். அப்போது ரசிகர்களை கண்டதும் காரின் மேற்கூரை வழியாக வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்த படியே காரில் சென்றனர். ரஜினிகாந்த்தை கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர்.
இன்றும் (புதன்கிழமை) அந்த பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடக்கிறது.