லாரி பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை
எடப்பாடி அருகே லாரி பட்டறை உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் தீர்த்துக்கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
எடப்பாடி
லாரி பட்டறை உரிமையாளர்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). லாரி பட்டறை உரிமையாளர். இவர், சங்ககிரி பகுதியில் லாரி பாடி கட்டும் பட்டறை நடத்தி வந்தார். பட்டறையிலேயே தங்கி இருக்கும் ரமேஷ், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இதற்கிடையே நேற்று அதிகாலையில் கொங்கணாபுரம் அருகே கருங்கல்காடு பகுதியில் ரமேஷ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரமேஷ் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரமேஷ் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தொழிலாளி சிக்கினார்
ரமேசுடன் வேலை பார்த்த நபர்கள் குறித்து விசாரித்த போது, எடப்பாடி வெள்ளரிவெள்ளி கிராமம் மாக்கனூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சசிகுமார் (23) என்பவர் ரமேசுடன் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். சசிகுமாரும், ரமேசும் இரவு ஒன்றாக பட்டறையில் இருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டது.
உடனே போலீசார் சசிகுமார் செல்போன் எண் சிக்னலை பார்த்த போது அது ஈரோட்டில் காண்பித்தது. ஈரோடு விரைந்த போலீசார் சசிகுமாரை சுற்றி வளைத்து பிடித்ததாக தெரிகிறது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் ரமேசை குத்திக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
கள்ளத்தொடர்பு
சசிகுமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
அதாவது, சசிகுமாரின் தாய்க்கும், ரமேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சசிகுமார் பலமுறை கண்டித்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு ரமேசும், சசிகுமாரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் சசிகுமார் வீட்டுக்கு ரமேசையும் அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள், எடப்பாடி கச்சுப்பள்ளி பிரதான சாலையில் வெண்டனூர் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்று ரமேசிடம், சசிகுமார் மீண்டும் கூறியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரமேசை, சசிகுமார் கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதற்கிடையே ரமேசின் உறவினர்கள் சங்ககிரி- ஓமலூர் பிரதான சாலையில் திரண்டனர். அவர்கள் ரமேசுக்கு கள்ளத்தொடர்பு எதுவும் கிடையாது. எனவே கொலையில் உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் எனக்கோரி அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சசிகுமார் கூறும் தகவல்கள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சசிகுமாரின் தாயிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு சத்யா (26) என்ற மனைவியும், சஷ்வந்த் (5) என்ற மகனும், தன்யாஸ்ரீ (1) என்ற மகளும் உள்ளனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.