எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 34 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

Update: 2023-04-04 18:45 GMT

கடலூர்:

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதேபோல் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 445 பள்ளிகள் மூலம் 18 ஆயிரத்து 274 மாணவர்களும், 16 ஆயிரத்து 520 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 794 மாணவர்கள் எழுத உள்ளனர்.

149 மையங்கள்

இத்தேர்விற்காக மாவட்டத்தில் 149 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்களும் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான 8 பறக்கும் படையினரும், 223 உறுப்பினர்கள் கொண்ட நிலை படையினரும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுகள் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது. மேலும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதி போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் போதுமான அளவு அரசு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்