எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 40,240 பேர் எழுதினர்
கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 40,240 மாணவ-மாணவிகள் எழுதினர்.;
கோவை
கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 40,240 மாணவ-மாணவிகள் எழுதினர். 1290 பேர் தேர்வு எழுதவரவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத 526 பள்ளிகளை சேர்ந்த 41,530 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதையொட்டி மாவட்டத்தில் மொத்தம் 157 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
தேர்வு மையத்துக்கு நேற்று காலை 8 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினா். முன்னதாக அவர்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். பெரும்பாலானோர் பெற்றோரிடம் ஆசி பெற்றனர்.
1290 பேர் வரவில்லை
பின்னர் மாணவ-மாணவிகள் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. மாற்றுதிறனாளி மாணவர்கள் எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
தேர்வு பணியில் 157 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 157 துறை அலுவலர்கள், 180 பேர் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்துக்கான தேர்வை 41,530 மாணவ-மாணவிகள் எழுத இருந்தநிலையில் 40,240 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 1290 பேர் தேர்வு எழுதவரவில்லை.
பொதுத்தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதியும், தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் சிரமமின்றி செல்வதற்கு கூடுதல் பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தன.