சரக்கு வாகனத்தில் இறந்து கிடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டிரைவர்

திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் டிரைவர் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

திருவாடானை, 

திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் டிரைவர் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு வாகன டிரைவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (வயது 42.) டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து சரக்கு வாகனத்தில் டிராக்டர் ட்ரெய்லர்களுக்கு பொருத்தக்கூடிய இரும்பு உபகரணங்களை ஏற்றிக்கொண்டு சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான டிராக்டர் உதிரிபாக விற்பனை கடைக்கு வந்தார்.

அங்கு அவர் ஏற்றி வந்த இரும்பு உபகரணங்களை இறக்கிவிட்டு அங்கு பெறப்பட்ட ரூ.50 ஆயிரத்தையும் தனது வாகனத்தின் உள்ளே வைத்துவிட்டு மதுரை சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப் அருகில் சரக்கு வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

சாவு

பின்னர் வாகனத்தில் அமர்ந்து கொண்டு தனது மனைவி நாகஜோதிக்கு போன் செய்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவரது மனைவி போன் செய்த போது எடுக்கவில்லையாம். உடனே ராம்குமாரின் மனைவி சி.கே.மங்கலத்திற்கு வந்து உள்ளார். அங்கு அவருடன் வந்த கிருஷ்ணன் கோவில் கொந்தராயன்குளம் மாரீஸ்வரன் என்பவரும் ராம்குமாரின் வாகனம் நின்ற இடத்திற்கு சென்றனர்.

சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ராம்குமாரை மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணை

இது குறித்து ராம்குமாரின் மனைவி நாகஜோதி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ராம்குமார் இறந்து கிடந்த சரக்கு வாகனத்துக்குள் ஊமத்தங்காயும் எருக்கம் பூவும் சிதறி கிடந்துள்ளது. சி.கே.மங்கலத்தில் உள்ள டிராக்டர் கம்பெனியிலிருந்து பெற்ற ரூ.50, ஆயிரமும் வாகனத்திற்கு உள்ளேயே இருந்துள்ளது. இறந்த ராம்குமாரின் உடலில் வலது கையில் காயமும் இடது பக்க வயிற்றில் காயமும் இருந்துள்ளது. அதன் அடிப்படையில் திருவாடானை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்