மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தவறான வீடியோ பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தவறான வீடியோ பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-21 16:06 GMT


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் உடலை நேற்று வரைக்கும் அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.

அதே நேரத்தில் மாணவி இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு , மகளின் சாவுக்கு நீதிகேட்டு ஸ்ரீமதியின் தந்தையான ராமலிங்கம் தீக்குளிக்க முயற்சி செய்வதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வந்தது.

ஆனால், இந்த வீடியோவில் இருப்பது மாணவியின் தந்தை இல்லை என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்

மாணவி ஸ்ரீமதியின் தந்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம்முன்பு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவிவருகிறது.

அந்த வீடியோ தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் அருகே உள்ள பெருநாட்டான்தோப்பு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும், அவரது பக்கத்து வீடான முனுசாமி குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட வேலி பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14.07.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்தவர்களால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தான் அது.

கடும் நடவடிக்கை

ஆனால் தற்போது, இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இறந்து போன மாணவி ஸ்ரீமதியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது கலங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்