இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது - சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தகவல்

இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும், சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.;

Update:2023-04-25 04:20 IST

கோப்புப்படம்

சென்னை,

இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 'இலங்கைக்கு வாருங்கள்' என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை தென்னிந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் நேற்று இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தலைமையில் வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இலங்கையில் இருந்து வந்து பங்கேற்ற 50-க் கும் மேற்பட்ட முகவர்கள், அங்குள்ள சுற்றுலா திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து ஹரின் பெர்னாண்டோ கூறியதாவது:-

இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்துதான் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருகிறார்கள். இலங்கைக்கு எப்போதும் உதவும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இலங்கையில் மக்கள் சகஜநிலைக்கு திரும்பியுள்ளனர். பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதில் சுற்றுலாத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

இலங்கை மீதான எதிர்மறை விமர்சனங்களை அகற்றி, அழகான சுற்றுலா தளங்களை பயணிகள் கவலையின்றி, அச்சமின்றி வந்து கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய பயணிகளை சுற்றுலாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக 20 டாலருக்கு விசா வழங்கப்படுகிறது. மேலும் மே மாதத்தில் இருந்து பயணிகளுக்கான சொகுசு கப்பல், புதுச்சேரியில் இருந்து தலைமன்னாருக்கு மாதத்துக்கு 4 முறை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜெயசூர்யா, இலங்கை சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு பணியக தலைவர் சலகா கஜபாகு, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜெயசூர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்