சட்டவிரோதமாக தங்கி குடியிருப்பு ஆவணங்கள் பெற்ற இலங்கை நபர் அதிரடி கைது

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குடியிருப்பு ஆவணங்கள் பெற்ற இலங்கை நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பாஸ்போர்ட் ஏஜெண்டும் சிக்கினார்.

Update: 2023-01-26 18:39 GMT

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து குடியிருப்பு ஆவணங்கள் பெற்ற இலங்கை நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பாஸ்போர்ட் ஏஜெண்டும் சிக்கினார்.

ரகசிய தகவல்

ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் கடந்த சில தினங்களாக அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விசாரணையில் பெரியபட்டினம் கிழக்குத்தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஒருவர் தங்கியிருப்பது தெரிந்து அதிரடியாக அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் தங்கியிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45) என்பது தெரிந்தது.

ஆவணங்கள் சிக்கியது

அவரிடம் நடத்திய சோதனையில் வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் சட்டவிரோதமாக உரிய காலத்திற்கு பிறகு தங்கியிருப்பதுடன் மேற்கண்ட ஆவணங்களை பெற்றுள்ளதும் தெரிந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துவான் சபைதீன் நவரத்தின கற்கள் விற்பனை செய்பவர் என்பதும், கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் இருந்து முறையான பாஸ்போர்ட்டில் தமிழகம் வந்து நவரத்தின கற்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முத்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

பாஸ்போர்ட்

திருமணம் முடிந்த நிலையில் மாமனாரின் வீட்டின் முகவரியை பயன்படுத்தி கடந்த 2017-ம் ஆண்டு ரேஷன்கார்டில் பெயர் சேர்த்து கொண்ட துவான் சபைதீன் அதன்பின்னர் 4 முறை பல காரணங்களுக்காக இலங்கை சென்று வந்துள்ளார். அப்போது மனைவியையும் அழைத்து சென்று அங்கு பதிவு திருமணம் செய்து கொண்டாராம். மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்றதால் பெரியபட்டினம் வந்தவர் அதன் பின்னர் இலங்கைக்கு செல்லாமல் 2019-ம் ஆண்டுக்கு பிறகு விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக பெரியபட்டினத்தில் தங்கி இருந்துள்ளார். மாமனாரின் முகவரியை பயன்படுத்தி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இந்தநிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் பழைய பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாததால் புதிய பாஸ்போர்ட் பெற எண்ணி உள்ளார். இதற்காக பெரியபட்டினத்தை சேர்ந்த ஜகாங்கீர் என்பவரை அணுகினார். அவர் ஆவணங்களை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் அருகே பனைக்குளம் மேற்குத்தெருவை சேர்ந்த அன்வர்ராஜா(45) என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

கைது

அன்வர்ராஜா அவரின் வீட்டின் பின்பகுதியில் துவான் சபைதீன் குடியிருப்பதாக காட்டி தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொடுத்துள்ளார். இதனை வைத்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து துவான் சபைதீனை கைது செய்தனர்.

பாஸ்போர்ட் ஏஜெண்டு சிக்கினார்

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் பனைக்குளத்தை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜெண்டான அன்வர்ராஜாவை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர். இதுதவிர, ஜகாங்கீரை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்