முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 2 மாதங்கள் நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2023-01-01 18:45 GMT

ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் 2 மாதங்கள் நடைபெறும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

விளையாட்டு போட்டிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் குழு மற்றும் தனி நபர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

கபடி, சிலம்பம்

பொதுப்பிரிவு 15-35 வயது ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவ, மாணவிகள் 12-19 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12-19 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பேட் மிண்ட்டன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து போட்டி நடைபெறும்.

பரிசு

மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டி நடைபெறும். அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை ஆண், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடைபெறும். மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.ஆயிரம் வழங்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்