திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டிகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்று தடகள சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகள் நியமனம்
திருப்பூர் தடகள சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவரும், திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் தடகள சங்கத்தின் நிர்வாக வசதிக்காக மூத்த துணைத்தலைவராக கிட்ஸ் கிளப் பள்ளிக்குழுமங்களின் தலைவர் மோகன்கார்த்திக், துணைத்தலைவர்களாக சந்தீப்குமார், வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், மதிவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக மணிவேல், இணை செயலாளர்களாக அழகேசன், நிரஞ்சன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
விழிப்புணர்வு முகாம்
கூட்டத்தில் ஜூன் மாதம் 2-வது திருப்பூர் மாவட்ட சீனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளையும், ஆகஸ்டு மாதம் 5-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளையும் போட்டோ பினிசிங் எலக்ட்ரானிக் மெசர்மெண்ட் முறையில் நடத்துவது, அதிகப்படியான மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்வது, அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடகள போட்டிகள் நடத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலமாக கிடைக்கும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் அனைத்து பள்ளி, கல்லூரி உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர், தடகள பயிற்சியாளர்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யும்முறை, உணவு வகைகள், பயிற்சி முறைகள், காயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றி பயிற்சி முகாம் நடத்துவது, அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி முகாம் நடத்துவது, திறமையான, பொருளாதாரத்தில் பின்தங்கிய தடகள வீரர்களை கண்டறிந்து உதவிகள் அளிப்பது, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயண வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.