கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அரசு பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வினீத் பரிசு வழங்கி பாராட்டினார்.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
தமிழக அரசு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக பிப்ரவரி மாதம் 9-ந் தேதியை அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் இந்த சட்டம் குறித்தும், தண்டனை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆகியோர் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் மற்றும் தொழிலாளர் இணை ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மாணவிகளுக்கு போட்டிகள்
அதன் ஒரு கட்டமாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவிகளுக்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டன.
அந்த போட்டிகளில் மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று ஓவியங்கள், கட்டுரைகள், பேச்சுத்திறமையை வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இளைய சமுதாயத்தினர் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் உருவாகுவதற்கு அடித்தளமாக அமையும்.
கலெக்டர் பாராட்டு
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற மாணவிகளுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வினீத் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.