தர்மபுரியில்முதல்-அமைச்சர் கோப்பை தடகள போட்டிகள்900 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

Update: 2023-02-05 18:45 GMT

தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 900 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தடகள போட்டி

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த போட்டிகளை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கைப்பந்து, டென்னிஸ், கபடி போன்ற பல்வேறு வகையான குழு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் விளையாட்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில போட்டிக்கு தேர்வு

முதற்கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 21 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தடகள விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்