மாணவ, மாணவிகளுக்கு பேச்சுபோட்டிகள்

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட உள்ளன.

Update: 2022-09-27 18:45 GMT

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சு போட்டிகள்

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியே வருகிற அக்டோபர் 12-ந் தேதி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, 3-ம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன், சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பங்கேற்கலாம்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 12-ந் தேதி காலை 8.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 9.30 மணிக்கும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று, மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்