பொது இடங்களில் மீண்டும் கண்கவர் சுவர் ஓவியங்கள்

திருச்சி மாநகரை அழகுபடுத்த பொது இடங்களில் மீண்டும் கண்கவர் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Update: 2022-07-09 19:24 GMT

திருச்சி மாநகராட்சியில் முக்கிய சந்திப்புகளில் உள்ள திறந்தவெளி மற்றும் பொது சொத்துகளை ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு கிராபிட்டி மூலம் அழகுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியின் பொது பூங்காக்களில் சுற்றுச்சுவர், சாலையின் மையத்தடுப்பு சுவர் மற்றும் பாலங்களின் அடிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஓவியம் வரைய அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் திருச்சி மாநகரின் இழந்த வசீகரத்தை மீண்டும் பெறப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் நம்புகிறது. முதற்கட்டமாக மாவட்ட நீதிமன்றம் அருகே எம்.ஜி.ஆர். சிலை மற்றும் கலெக்டர் அலுவலக சாலையை இணைக்கும் மேஜர் சரவணன் சாலையில் புதிதாக கட்டப்பட்ட மையத்தடுப்பு சுவர்களில் வழக்கமான கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளை வரையாமல் பிரகாசமான வண்ணங்கள், கலை வடிவங்கள், தூய்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு செய்திகள் வரையப்பட்டுள்ளன.

மேலும் உறையூர் பகுதியில் வெக்காளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் சாலையின் இருபுறமும் திருச்சியின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் கோவில் யானை, தமிழர்களின் கிராமிய நடனங்கள், வீர விளையாட்டுகள், விவசாயம், பழங்கால பெண்களின் பொழுது போக்கு விளையாட்டுகள் போன்ற பல்வேறு அம்சங்களை சுவர் ஓவியமாக ஓவியர்களை கொண்டு வரைந்து வருகிறார்கள்.

அழகுபடுத்தப்பட்ட இடத்தை அசுத்த படுத்துவதை மக்கள் தவிர்ப்பார்கள் என்றும், இதன்மூலம் ஸ்வட்ச் பாரத் மிஷன் தரவரிசையில் மாநிலத்தில் தூய்மையான நகரம் என்ற பெருமையை மீண்டும் பெறமுடியும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எண்ணுகிறது. இருப்பினும் மோசமான பராமரிப்பு அதன் நோக்கத்தை தடுத்துவிடக்கூடாது என்றும், ஓவியங்கள் மீது அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி அவற்றை கெடுத்துவிடக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்