கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-05-05 19:19 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை ஸ்ரீராமர், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கலச பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் நடத்தினார். இரவில் கேடயத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் கோவில் பரம்பரை ஸ்தானிகம் பொன் நாராயண அய்யர், முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்தி உற்சவ மூர்த்திகளுக்கு காலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்