முருகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியர் சுவாமிக்கு கந்த சஷ்டி விழா 4-ம் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.