முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-07-23 19:29 GMT

சிறப்பு வழிபாடு

முருகனுக்கு உகந்த நாளாக கிருத்திகை பார்க்கப்படுகிறது. அதிலும் ஆடி மாத கிருத்திகை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஆடி கிருத்திகையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி கிருத்திகையன்று பக்தர்கள் விரதம் இருந்து முருகனை மனமுருகி வேண்டினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சந்தனக்காப்பு அலங்காரம்

இதில் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று காலை முருகனுக்கு மஞ்சள், தயிர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் பாலமுருகனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் தரிசனம்

இதேபோல் பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதி மற்றும், குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சன்னதியில் ஆடி கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்