அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சமயபுரம், ஜூலை.23-
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், விளக்கேற்றியும் வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வருகை தந்தனர்.
இதேபோல், இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், உஜ்ஜயினி ஓம் காளிஅம்மன் கோவில், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவானைக்காவல்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர்கிரீடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்தார்.
துறையூர்
துறையூர் பாலக்காட்டு மாரியம்மன், திரவுபதி அம்மன், நல்லகாவல் தாய் அம்மன், பெரிய மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், சவுண்டீஸ்வரியம்மன், தீப்பாஞ்சி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தா.பேட்டை
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தா.பேட்டை பிள்ளாதுரை பெரியமாரியம்மன், மகாமாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதுமட்டுமின்றி தா.பேட்டை பகுதி மக்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.
தொட்டியம்-லால்குடி
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் மதுரை காளியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து வருகின்ற ஆடி அமாவாசை தினத்தன்று 108 புடவை அலங்காரமும் அதைத்தொடர்ந்து 3-வது வெள்ளிக்கிழமை வளையல் அலங்காரமும் நடைபெற உள்ளது. லால்குடி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. லால்குடி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அருங்கரை காளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில்சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.இதேபோல், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, துவரங்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.