விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சியில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் கொலு அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவித்து வழிப்பட்டனர். டி.கோட்டாம்பட்டி பாலாஜி நகர் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிலை கண் திறப்பு, 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மகா தீபாராதனை
வடுகபாளையத்தில் உள்ள மகா கணபதி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில் உள்ள பாலஸ்வர்ண கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வைர கவசம்
சூளேஸ்வரன்பட்டியில் உள்ள விஜயகணபதி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மார்க்கெட் ரோட்டில் உள்ள கோவிலில் விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடை வீதியில் உள்ள பாலகணேசர் வைர கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படும் சித்தி விநாயகர் கோவிலிலும், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள விநாயகருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.