சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-18 19:48 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜகணபதி கோவில்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் கடைவீதியில் உள்ள பிரசித்திப்பெற்ற ராஜகணபதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், திரவியம், மஞ்சள், சந்தனம், விபூதி உள்பட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராஜகணபதிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று ராஜகணபதியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

ரத்ன அங்கி அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வருகிற 29-ந் தேதி வரை தினமும் ராஜகணபதிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. இதேபோல் சேலம் ராஜாராம் நகர் தேவராஜ கணபதி, வரப்பிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சேலம் சத்திரம் சீதாராம ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை அப்புச்செட்டி தெரு முனியப்பன் கோவிலில் உள்ள அரசமர விநாயகர் சித்திபுத்தி சமேதருடன் திருமண அழைப்பிதழ் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. செவ்வாய்பேட்டை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு ரத்ன அங்கி அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

இரட்டை பிள்ளையார்

சேலம் மரவனேரி அன்னை காளியம்மன் கோவிலில் உள்ள வலம்புரி வரசித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையொட்டி சித்திபுத்தி விநாயகர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம்-பெங்களூரு சாலையில் வன காளியம்மன் கோவிலில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து பிள்ளையாருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நரசோதிப்பட்டி மீனாட்சி நகரில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் உள்ள நாக பிள்ளையார் சந்தன காப்பு அலங்காரத்திலும், செங்கல்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ராஜ அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்