பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சங்கராபுரம், மணலூர்பேட்டை பகுதி பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2022-10-08 18:45 GMT

ரிஷிவந்தியம்

அரங்கநாத பெருமாள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி மணலூர்பேட்டை அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள ரங்கநாயகி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சாமி தரிசனம்செய்வதற்காக அதிகாலை முதலே கள்ளக்குறிச்சி மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வெங்கடேசபெருமாள்

அதேபோல் சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழங்க பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இது தவிர தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள், குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள், காட்டுவன்னஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்