பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
துறையூர்:
புரட்டாசி மாத 2-ம் சனிக்கிழமையையொட்டி நேற்று திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் துறையூரை அடுத்த பெருமாள்மலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு நேற்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து, சாமி தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்தி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தா.பேட்டையில் உள்ள வேணுகோபாலசுவாமி, உத்தண்டம்பட்டி கலியுக ராஜகோபால் சுவாமி உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. நீலியாம்பட்டி தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோவில், அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.