பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்
துணிவு, தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.;

சென்னை,
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் - 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28.03.2025) முதல் 15.04.2025 வரை நடைபெற உள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வுகள் 22.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெற்று முடிந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 12,487 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 4,46,471 மற்றும் மாணவிகள் 4,40,499 என மொத்தம் 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273 என மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4,113 தேர்வுமையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில் பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு வாழ்த்துகள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.