ஆடி மாத பிறப்பையொட்டி தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-17 18:45 GMT

ஆடி மாத பிறப்பு

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி நகரில் உள்ள கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், சாலை விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

எல்லையம்மன் கோவில்

தர்மபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி அம்மனுக்கு பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மேல் தோப்பில் அமைந்துள்ள ராமாயி, பொம்மாயி சமேத விரிஞ்சிபுரத்து முனியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி அருகே ஆழிவாயன்கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள ஓம் சக்தி பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

மேலும் செய்திகள்