கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-19 19:12 GMT

கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக முருகனுக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்பட 21 பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நாமக்கல் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காளிப்பட்டி கந்தசாமி

நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோவிலில் முருகனுக்கு அமாவாசை மற்றும் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி பலவிதமான மலர்கள் மற்றும் கனி வகைகளால் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு பலவிதமான வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், தங்ககவச ஆடை அணிவித்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், வீரபாண்டி, மகுடஞ்சாவடி இளம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி - தெய்வானையுடன் முருகன் பல்லாக்கில் திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது.

விஜயகிரி வடபழனி ஆண்டவர்

இதேபோல் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசிமாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையொட்டி கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பொத்தனூர் அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், சக்திநகரில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்