தஞ்சை-கும்பகோணம் வழியாக 17-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

தஞ்சை-கும்பகோணம் வழியாக 17-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கம்

Update: 2022-12-27 20:14 GMT

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சை-கும்பகோணம் வழியாக அடுத்த மாதம்(ஜனவரி) 17-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பணி புரிந்து வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அப்படி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படுகின்றன.சொந்த ஊருக்கு செல்பவர்கள் மீண்டும் தாங்கள் பணிபுரியும் சென்னை போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக தஞ்சை-கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

17-ந் தேதி

அடுத்த மாதம்(ஜனவரி) 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11.40 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(எண்:06044) நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக தஞ்சைக்கு இரவு 11.05 மணிக்கும், கும்பகோணத்திற்கு இரவு 11.40 மணிக்கும் வந்து சேருகிறது. பின்னர் மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.20 மணிக்கு சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து 18-ந் தேதி(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்(எண்:06043) அதே வழியாக கும்பகோணத்திற்கு மாலை 3.45 மணிக்கும், தஞ்சைக்கு மாலை 4.23 மணிக்கும் வந்து சேருகிறது. பின்னர் திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

விரைவில் முன்பதிவு

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்