சிறப்பு உதவித்தொகை திட்டம்: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-12-01 12:16 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டத்தில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தொகை பெறுவதற்கு (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்று இருக்க வேண்டும். அல்லது கடந்த 2 ஆண்டுகளில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

ஆசிய விளையாட்டுப்போட்டி, காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சம்பியன்ஷிப் காமன்வெல்த் சேம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் எட்டு இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்கிவிக்கும் திட்டத்தில் பயன்பெற அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இருக்க வேண்டும்.

வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அடைக்கப்படுவார்கள். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவர். 2 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்பவர்களுக்கு கூடுதல் காலம் நீட்டிப்பு வழங்கப்படும்.

திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிற விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்