ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பட்சிராஜருக்கு சிறப்பு பூஜை
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பட்சிராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நவத்திருப்பதிகளில் ஒன்பதாவது தலமாக விளங்கும் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பட்சிராஜருக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கோவில் வடக்குமாடவீதியில் கோவில் மதில் சுவர் மேல் பட்சிராஜனான கருடபகவான் சிலை உள்ளது. இந்த நிலையில் ஆடி சுவாதியை முன்னிட்டு தனி சன்னதியில் உள்ள பட்சிராஜருக்கு மாலையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பட்சிராஜர் சன்னதி முன்புள்ள விளக்குத்தூணில் பத்தாயிரம் சிதறு தேங்காய் நேர்ச்சையாக எறியப்பட்டது. தொடர்ந்து பட்சிராஜருக்கு நேர்ச்சையாக கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து ஆயிரம் கிலோ பழங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மஞ்சள், திரவியம், தேன், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், சீனிவாச சேவா அறக்கட்டளை ஆலோசகர்கள் விஜயகுமார், கசங்காத்த பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.