சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-07-15 20:45 GMT

சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதேபோன்று திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம், வடமதுரை

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. நாணயங்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

மேலும் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கைலாசநாதர் கோவிலில் ஆனி மாத சிவராத்திரி பூஜையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், பால், தயிர், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுந்தரேசுவரரின் எதிரில் வீற்றிருக்கும் நந்தீஸ்வரருக்கும் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. அதன்பின்னர் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி நந்தீசுவரரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேசுவரர் உற்சவ சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபாடு செய்தனர். அதன்பின்னர் பக்தர்களுக்கான அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி கபாலீஸ்வருக்கு சந்தனம், பூக்கள், மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கோபால்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி

பழனி பெரியாவுடையார் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிவனுக்கு பால், பழம், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்