பேரூராட்சி மூலம் சீரமைக்க சிறப்பு அனுமதி தர வேண்டும்

பழுதடைந்து உள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் சாலையை பேரூராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்க சிறப்பு அனுமதி தரவேண்டும் என்று கலெக்டரிடம், பேரூராட்சி தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2023-04-21 20:56 GMT


பழுதடைந்து உள்ள ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் சாலையை பேரூராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்க சிறப்பு அனுமதி தரவேண்டும் என்று கலெக்டரிடம், பேரூராட்சி தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

கலெக்டரிடம் கோரிக்கை மனு

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேற்று கலெக்டர் அலுவலகத்தில், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் சாலை

ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனம் 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழமையான நிறுவனம் ஆகும். 69.96 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த வளாகத்திற்குள் நிர்வாக கட்டிடங்கள், ஆய்வு கூடங்கள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் வயல்கள் அமைந்து உள்ளது.

இந்த வளாகத்தில் உள்ள 1120 மீட்டர் தார்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பயன்படும் சாலைகள் மட்டுமல்லாமல் மருத்துவக்குடி, வண்ணக்குடி வழியாக திருவிடைமருதூர் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் மூலம் சீரமைக்க அனுமதி

எனவே தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான 2,520 கி.மீ. நீளமுள்ள சாலைகளை பொதுமக்கள், விவசாயிகள், விவசாய பயிற்சி மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் ஆடுதுறை பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ள சிறப்பு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத், துணை தலைவர் கமலா சேகர், உறுப்பினர் ம.க.பாலதண்டாயுதம், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மனுவை பெற்றுக்ெகாண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்